Tejukrishna’s Blog

A blog for modern aesthetics,modern Tamil Literature and world literature inTamil Translation

நிக்கிஃபோரஸ் வ்ரேட்டகோஸ்

Posted by tejukrishna on January 10, 2009

நிக்கிஃபோரஸ் வ்ரேட்டகோஸ்

Nikiforos Vrettakos



“And your country , when you hold it dear in your heart, is everywhere.
Your constellation, from that height, does not see Mt.Taygetos.

It sees Earth.”

nikiforospictures90_2

ஃவ்ரெட்டகோஸ் இயல்பாய் பிரவாகிக்கும் கவிதை வரிகளை ஓரு தூய பாடும் குரலாய்,வடிவத்திற்கு பிராதான கவனம் செலுத்தாமல் எழுதுபவர். கிரேக்கத்தின் நவீன கவிஞர்களுள் முக்கியமானவர். ஆனல் நோபல் பரிசு பெற்ற சக கிரேக்க கவிஞரான ஓஸியஸ் எலிடிஸ் அளவிற்கு  ஆங்கில இலக்கிய உலகில் பிரபல்யம் அடையாதவர்.

ஸ்பார்ட்டா நகருக்கு அருகில்  உள்ள நகரான க்ரோகியாஸ்  என்ற ஊரில் ஜனவரி 1, 1911-ல் பிறந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஏதென்ஸ் சர்வகலாசாலையில் சேர்ந்த ஓரு வருடத்திலேயே  படிப்பை வட்டுவிட்டார். அதே ஆண்டில் அவரது முதல் கவிதைத் தொகுப்பு (Under Shadows and Lights” ) வெளியானது.

1967-ல் தனது அரசியல் நிலைபாடு காரணமாக ஏதென்ஸை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்துக்கு;ச சென்ற வ்ரெட்டகோஸ், 1974-ல் மீண்டும் க்ரீஸ் நகருககுத் திரும்பினார். இரண்டு முறை =State Prize for Poetry’ விருதைப் பெற்றார். கவிதைத் தொகுப்புகள் உட்பட பல புத்தகங்களின் ஆசிரியர். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். கவிதைகளுக்காக தனது தேசத்தின் பல விருதுகள் வழங்கப்பெற்றவர்.

உலகை மேம்படுத்த வேண்டும் என்கிற  நோக்கம் இவருடைய கவிதைகளில் அறநெறிச் செய்திகளைச் சொல்லக் கட்டாயப்படுத்துகிறது. 1991 ஆகஸ்ட் 4 அன்று உயிர்நீத்த, சமாதானத்திற்கும் நேசத்திற்குமான கவிஞராக அறியப்படும் வ்ரெட்டகோஸ், “கிரேக்க கவிதைகளின் புனிதர்” என்றழைக்கப்படுகிறார்.

நீயின்றி புறாக்கள்


நீயின்றி புறாக்கள்

நீரைக் கண்டுபிடித்திருக்க முடியாது.

நீயின்றி இறைவன் தன்

நீரூற்றுக்களில் ஓளியேற்றியிருக்க முடியாது.

ஓரு ஆப்பிள் மரம் தூவுகிறது தன் மலர்களைக்

காற்றில்; உன் அங்கியில்

வானினின்று நீர் கொணர்கிறாய் நீ,

கோதுமைத்தாள்களின் ஓளிர்வு,மற்றும் உன் மீது

சிட்டுக்குருவிகளாலான ஓரு நிலவு.


வார்த்தைகளின் களம்


காட்டுப்பூ ஓன்றைச் சுற்றும்

தேனீயைப் போல்தான் நானும். சுற்றித்திரிகிறேன் நான் ஓய்வின்றி வார்த்தைகளைச் சுற்றி.

இந்தக் குரலை வார்த்த நீண்ட தொடர்வரிசை முன்னோர்களுக்கு நன்றியுரைக்கிறேன்.

இணைப்புகளாய் தறித்து அர்த்தங்களை ஆக்கினர் அவர்கள். கொல்லர்கள் போல் அவர்கள் வார்த்தனர் பொன்னாக அவற்றை, ஆயின அவை ஹோமர்,அக்கிலஸ்,மறைநூல்கள் மற்றும் பிற அணிகலன்களாக.”

வார்த்தைகளின் சரடுகளோடு,

-என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும்

இந்த பொன்னிலிருந்து வரும் பொன்-

நான் இணைக்கப்பட்டிருக்கிறேன், பங்கெடுக்கிறேன்

இவ்வுலகில்.

கவனம் கொள்வீர்:

நான் சொன்னேன்,எழுதினேன்,நான் “நேசிக்கிறேன்.”

மொழிபெயர்ப்பு: மர்ஜோரி சேம்பர்ஸ்.


ஆக்கங்களனைத்திலும் பரிசுத்தமானது


அதெப்படியோ சற்றும் இருள் மிஞ்சவில்லை.

ஊறவைத்திருக்கிறேன் சூரிய ஓளியை ஓராயிரம்

காயங்களூடாக,

உன்னைச் சுற்றி நானிப்போது போர்த்தியிருக்கும் இந்த வெண்மையை உன்னால் ஆல்ப்ஸில்கூடக்

காணவியலாது:இக்காற்று சுழல்கிறது அவ்வுயரத்திலும்கூட கறைபடுத்துகிறது பனியை.

வெண்ரோஜாக்களிலும்கூட புழுதியின் சுவடிருக்கிறது.

துல்லியமான அற்புதம் நமக்குள்தான் இருக்கிறது:

விரிந்துபரந்த இவ்வெண் அகலிடம் மெய்யாகவே ஓளிர்கிறது இப்பிரபஞ்சம் மீதாக. படைப்புகளனைத்திலும் பரிசுத்தமானது வைகறை மெல்லொளியன்று,

நதி பிரதிபலிக்கும் வானமுமன்று,

ஆப்பிள் மலர்மொட்டுகள் மீதான சூரியனும் அன்று.

அது நேசம்.

கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு: ஜோன் கொரெலிஸ்


காலை நேர வானம்பாடி


என் வீர்யம் ஓரு நீல விசைப்பொழிவாய் வெடிக்கிறது

என் இரத்தநாளங்களனைத்தும் என் குரலில் ஒடுகின்றன.

என் இரத்தம் கொப்புளிக்கின்றது மௌனத்தில், புதர்களில் சிள்வண்டுகள் போல,

தன் துளிகளை என்றுமே கணக்கில் கொள்ளாத நதி போல,

ஒர் அற்புதம் போல அல்லது கடல் நோக்கி இறங்கும் ஓரு போதை முத்தம் போல.

திருவிழாக்காலக் கூட்டுச்சந்தியில் உலகம் சுறுசுறுப்பாக எனக்கு மேல்.

ஊதா,ரோஜா,வெள்ளை மற்றும்நீல நதிகள்

கம்பிவாத்தியக் கருவிகளுக்கு மத்தியில் புரள்கின்றன. சூழல் ஜ்வலிக்கின்றது.

தன் ஓளியின் இதயத்திலிருந்து,தன் தேவதைகளனைவரின் வாய் மூலமாய்க் கேட்கிற,

இறைவனின் நட்புச் செய்தியை உற்றுக் கேட்கிறேன் வாயடைத்துப்போய்.

பொங்கித் ததும்புகையில் வானம்பாடியையொத்த என் உத்வேக ஓழுக்கை

நீலமாக்கும் கடவுளின் ஓளியாலேயே பதிலுரைக்கிறேன் நான்.

சூரிய ஓளிக்கும் அன்பின் ஓளிக்கும் மத்தியிலிருக்கும் நட்சத்திரம்போல,

அவரது சாளரத்தின் உயரிய மரத்தில் சிறகடித்து

நான் காலையொளியைக் கொத்துகிறேன்;

அவருக்கு பதிலுரைக்கிறேன் பட்சிகள் போல சீட்டியடித்து,வார்த்தைகளின்றி.


ஏகாந்தம் இல்லை


மனிதன் தோண்டிக்கொண்டிருக்கும் அல்லது சீட்டியடித்துக் கொண்டிருக்கும்

அல்லது கைகளைக் கழுவிக்கொண்டிருக்கும்

இடத்தில் ஏகாந்தமில்லை.

மரம் தன் இலைகளை அசைக்குமிடத்தில் ஏகாந்தமில்லை. பெயரறியாப் பூச்சி அமருமிடத்தில்,

நட்சத்திரத்தை பிரதிபலிக்கும் சிற்றோடையிருக்குமிடத்தில்

உறங்கும் சிறுகுழந்தைத் தன் திறந்த சந்தோஷ

சிற்றிதழ்களால்

தன் தாயின் முலையைப் பற்றிக்கொண்டிருக்கும்

இடத்தில் ஏகாந்தமில்லை.

தமிழில்:தேஜு க்ருஷ்ணா

Posted in Poetry in Translation | Leave a Comment »

பெரிய கண்களுடைய பெண்கள் – ஜோஸ் அத்தை

Posted by tejukrishna on December 21, 2008

baby1

ஏஞ்சலிஸ் மாஸ்டரெட்டா

ஜோஸ் அத்தை

ஜோஸ் ரிவாடெனரியா அத்தை,ஆசைகள் அளவிற்கு பெரியதாகவும்,இருநிலவுகள் போன்றதுமான கண்களைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தாள். இன்னமும் ஈரப்பசையோடும் நிலையில்லாமலும் இருக்க,முதன் முறையாக  தன் தாயின் கைகளில் அவள் வைக்கப்பட்டபோது,  அந்தக்குழந்தைத் தன் கண்களைத் திறந்தாள். அவளது வாயின் ஓரத்தில் இருந்த ஏதோ ஒன்று ஓருகேள்வியைப் போல் தோன்றியது.
“என்ன தெரியணுமாம் உனக்கு?”ஜோஸ் அத்தை கேட்டாள், ஏதோ அந்த செய்கையைப் புரிந்து கொண்டு விட்டதாக பாவித்துக் கொண்டு.
எல்லா அன்னையரைப் போலவே, ஜோஸ் அத்தையும், அவளுடைய பெண்ணைப் போல அழகான ஜீவன் உலகத்தில் இருந்ததேயில்லை என்பதாக நினைத்தாள். அவளது சருமத்தின் நிறம், கண் இமைகளின் நீட்டம் மற்றும் அவளது உறக்கத்தின் சாந்தம் இவற்றால் ஜோஸ் அத்தை கிறங்கடிக்கப்பட்டாள். அவள் மகள் தனது உடலினூடே துடிக்கும் இரத்தம் மற்றும் திசுக்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்வாள் என்று கற்பனை செய்து பார்த்து பெருமிதத்தில் உடல் வெடவெடத்தாள்.
ஜோஸ் அத்தை  பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் தன் பெண்ணைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூன்று வாரங்களுக்கு மேல் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள். பின்னர் வெல்லவே முடியாத விதி, ஐந்து மணி நேரத்திற்குள் அக்குழந்தையைஅவளது அசாதாரணமான உற்சாக உயிர்த்துடிப்பை, அவளை மரணத்தை நோக்கி திருப்பி அனுப்புவதாகத் தோன்றிய ஒரு தனித்த தூரத்துக் கனவாக மாறச் செய்த பிணி ஒன்றினால்  நோயில் விழச்  செய்தது.
அவளுடைய சுய நோய்நீக்கு திறமைகள் அனைத்தும் குழந்தையை சிறிதளவுகூட குணப்படுத்த தவறியபோது, ஜோஸ் அத்தை, பயத்தால் வெளிறி குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள். அங்கே, அவளை ஜோஸ் அத்தையின் கைகளிலிருந்து பிடுங்கி எடுத்து சென்றார்கள். பின்னர், ஒரு டஜன் மருத்துவர்களும், நர்சுகளும் பதற்றத்துடனும் குழப்பத்துடனும் குழந்தையைச் சுற்றி பரபரத்தனர். தான் செல்வதற்கு தடை செய்யப்பட்டிருந்த கதவிற்கு பின்பக்கம் அவள் குழந்தை மறைவதை ஜோஸ் அத்தைக் கவனித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவோ, நெட்டுக்குத்தலான குன்று போன்ற வலியையோ சகித்துக் கொள்ள முடியாதவளாக தன்னைக் கீழே சரிய விட்டுக் கொண்டாள்.
விவேகியும், தெளிந்த புத்தியுள்ளவனாகவும் இருந்த  ( பெரும்பாலான ஆண்களைப் போலவே அப்படி இருப்பதாக காட்டிக் கொள்ளும்) அவள் கணவன் அவளை அங்கே பபார்த்தான். அவளை  எழுப்பி விட்டான். பிறகு, அவளது நம்பிக்கைக் குறைவையும், பகுத்தறிவுக் குறைவையும் கடிந்துக்  கொண்டான். அவள் கணவனுக்கு மருத்துவ விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் கடவுளைப் பற்றிப் பேசுவதைப் போல அவன் அதைப்பற்றிப் பேசினான். அழுவதையும், விதியை நொந்து கொள்வதையும் தவிர வேறெதையும் செய்ய இயலாமல் போன மூடத்தனமான நிலைக்குள் தன் மனைவி நிலை கொண்டு விட்டது அவனை மிகவும் சிந்தைக் குலைய செய்தது.
தீவிர சிகிச்சைப் பகுதிக்குள் குழந்தையைத் தனிமைப் படுத்தினர். ஒரு நாளில் அரைமணி நேரத்திற்கு மட்டும், அன்னையர் மாத்திரம் நுழைய அனுமதியிருந்த ஒரு தூய்மையான வெண்மை பகுதி. எனவே, அது பிரார்த்தனைகளாலும், இறைஞ்சுதல்களாலும் நிறைந்திருந்தது. எல்லா பெண்களும் தத்தம் குழந்தைகளின் முகத்திற்கு நேராக சிலுவைக் குறியிட்டனர், அவர்களது சின்னஞ்சிறு உடல்களை பிரார்த்தனை அட்டைகளாலும், புனித நீராலும் போர்த்தினர், இறைவனிடம் அவர்களை வாழவிடச் சொல்லி இறைஞ்சினர். ஜோஸ் அத்தையால் செய்ய முடிந்ததெல்லாம், மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்த அவள் குழந்தை படுத்திருந்த தொட்டிலுக்கு அருகில் சென்று கெஞ்சுவதுதான், ”இறந்துவிடாதே”. பிறகு அவள்  தன் கண்களைக் காய்ந்துபோக விடாமலும், செவிலியர் அவளைப் போகச் சொல்லும் வரையில் ஒரு அங்குலம் கூட நகரவோ செய்யாமலும் அழுதுகொண்டேயிருந்தாள்.
பிறகு கதவிற்கு அருகில் இருந்த பெஞ்ச்சில், தன் தலையை கைகளில் வைத்தபடி, பசியோ சப்தமோ இன்றி கோபமும் வெறியும், வைராக்கியமும் நம்பிக்கை இழப்புமாக, மீண்டும் அமர்வாள். என்ன செய்ய முடியும் அவளால்? அவள் மகள் ஏன் உயிர் வாழ வேண்டும்? இந்த உலகில் தரித்திருக்கப் போதுமான அளவிற்கு பிடிப்புக் கொள்ளச் செய்யக் கூடியதாக அவளால் எதைத்தான் தர முடியும், முழுக்க ஊசிகளும் மருந்துக் குழாய்களுமாக இருந்த அந்தச் சின்னஞ்சிறு உடலுக்கு? இறந்து போவதற்கு பதிலாக முயற்சி செய்து பார்ப்பது பலனளிக்கத் தக்கதாக இருக்கும் என்று அவளை எதைச் சொல்லி நம்பவைக்க முடியும்?
ஒரு காலை வேளையில், எதற்காக என்று தெரியாமலேயே, தன் இதயத்தில் இருந்த ஆவிகளினால் மட்டுமே தெளிவிக்கப் பட்டு, தன் குழந்தைக்கு அருகே சென்று, தனது மூதாதையர் பற்றிய கதைகளைச் சொல்லத் தொடங்கினாள். அவர்கள் யாராக இருந்தனர், அவளும் அவளுடைய மகளும் வாய் மற்றும் தொப்புளில் பிணைக்கப்பட்டதற்கு முன்பாக எந்தப் பெண்கள் எந்த ஆண்களோடு தமது வாழ்க்கையைப் பின்னிப் பிணைத்திருந்தனர், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருந்தனர், என்ன விதமான வேலையை அவர்கள் செய்தனர், தனது மரபு வழிச் சொத்தாக அந்தக் குழந்தை என்ன சோகங்களையும் கொண்டாட்டங்களையும் வரித்துக்கொண்டிருந்தாள். அவள் வரை தொடர்ந்து வர வாழ்க்கையை அஞ்சாமையுடனும், கற்பனைகளோடும் யார் விதைத்தது.
பல தினங்களுக்கு அவள் நினைவுகூர்ந்தாள், கற்பனை செய்தாள், புதுதுபுதிதாகக் கண்டுபிடித்தாள். கிடைத்த ஒவ்வொரு மணி நேரத்தின் ஒவ்வொரு மணித்துளியும் ஜோஸ் அத்தை இடைவிடாமல் தன் மகளின் காதில் பேசியபடியே இருந்தாள். இறுதியாக ஒரு வியாழனன்று விடியலில், சாந்தப்படுத்த முடியாத வகையில், அந்தக் கதைகளில் ஒன்றை அவள் சொல்லிக் கொண்டிருந்த சமயம், குழந்தை தன் கண்களைத் திறந்து அவளை உன்னிப்பாக கூர்ந்து பார்த்தாள், தனது எஞ்சிய நீண்ட வாழ்நாட்களில் செய்யவிருந்ததைப் போலவே.
ஜோஸ் அத்தையின் கணவன் மருத்துவர்களுக்கு நன்றி கூறினான். மருத்துவர்கள், மருத்துவ சாஸ்த்திரத்தின் மேம்பாட்டிற்கு நன்றி தெரிவித்தனர். ஜோஸ் அத்தைத் தன் மகளை ஆரத்தழுவியபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினாள், ஒரு வார்த்தை கூட பேசாமல். தன் மகளின் வாழ்க்கைக்காக யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அவளுக்கு மட்டுமேதான் தெரியும். பெரிய கண்கள் கொண்ட பிற பெண்களின் முரட்டுத்தனமான மற்றும் நுட்பமான கண்டுபிடிப்புகளில் ஒளிந்திருந்த அந்தக் ‘கூறின்’ அளவிற்கு காரியமாற்ற எந்த விஞ்ஞானமும் திறம் பெற்றிருக்கவில்லை என்பதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள்.

Posted in Short Stories in Translation | 1 Comment »

பெரிய கண்களுடைய பெண்கள் -கோன்ச்சா எஸ்பார்ஸா அத்தை

Posted by tejukrishna on December 21, 2008

epc-732ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா

கோன்ச்சா-எஸ்பார்ஸா-அத்தை

தன் வாழ்வின் இறுதிக்கு நெருக்கத்தில், அவள் “வயலட்பூ” செடிகளை பயிரிட்டு வளர்த்தாள். மலர்களைக் கொண்டு அவள் நிறைத்த பிரகாசமான அறை ஒன்நிருந்தது அவளிடம். உள்ளதிலேயே மிகப் படாடோபமான வகைத் தாவரங்களை வளர்ப்பது எப்படி என்பதை அவள் கற்றாள். மேலும், கோன்ச்சா எஸ்பார்ஸாவின் தவிர்க்கமுடியாத நறுமணத்தை எல்லோரும் தம் வீடுகளில் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவற்றைப் பரிசு பொருளாக அன்பளிக்க அவள் விரும்பினாள்.
ஆறுதல் படுத்த முடியாத உறவினர்கள் சூழ்ந்திருக்க,  பளீரிடும் நீலவண்ண பட்டு அங்கியில் சயனித்தபடி, சாயம் பூசிய உதடுகளுடனும் வாழ்க்கை எண்பத்தைந்து வருடங்களுக்கு மேல் கூடுதலாக இன்னும் வழங்க விரும்பவில்லை என்ற காரணத்தால் மாபெரும் ஏமாற்றத்துடனும் இறந்து போனாள் அவள்.
வாழ்வதில் அவள் சலிப்பே அடையாமல் இருந்தது ஏன் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. ஒரு கோவேறு கழுதை ஓட்டியைப் போல கிட்டத் தட்ட தன் வாழ்நாள் முழுவதும் அவள் உழைத்திருந்தாள். ஆனால் அந்த முந்தைய தலைமுறைகள், தம்மை மேலதிகமாகத் தாக்குப் பிடிக்கச் செய்யும் ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தனர். எல்லா பழம்பொருட்களைப் போலவே: கார்கள், கடிகாரங்கள், விளக்குகள், நாற்காலிகள், தட்டுகள் மற்றும் பழங்காலப் பானைகள் போல.
கோன்செப்ஸியோன் எஸ்பார்ஸா, தனது எல்லா சகோதரிகளையும் போலவே மெலிந்த கால்களும், பெருத்த மார்பகங்களையும், மற்றும் நிஷ்டூரமான புன்னகையையும், புண்ணியாத்மாக்களின் பேரில் முழுமுற்றான அவநம்பிக்கையும், ஆவிகள் மீதும் அவற்றின் கோமாளித்தனமான வேடிக்கை மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் பெற்றிருந்தாள்.
அவள், ‘டக்ஸ்டெபெக்’  புரட்சியில் பங்கு கொண்டவரும், 1882-ல் கூட்டாட்சி அரசில் துணைத் தலைவராகவும், 1908-ல் மறு தேர்தல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தவருமான ஒரு மருத்துவரின் மகள். அவர் தன் வாழ்வை சங்கீத ரசனை மற்றும் தோற்றுப்போன கொள்கைகளால் நிரப்பிய ஒரு விவேகமான மற்றும் வசீகரமான மனிதர்.
என்றபோதிலும், விதி கணக்கை சமன் செய்வதையே விரும்புவதால், தேவைக்கு மேலான தந்தையையும், தேவைக்குக் குறைவான கணவனையும் பெற்றிருந்தாள். ஹினியெஸ்ட்டா என்ற பெயர் கொண்ட ஒருவனை அவள் மணந்தாள். அவனது ஒரே குறைபாடு என்னவென்றால் அவனது குழந்தைகள் போலவே அவன் இருந்ததும், அவள் அவனை அவர்களில் ஒருவராகவே நடத்த வேண்டியிருந்ததும்தான். அவன் பணம் சம்பாதிப்பதில் சமர்த்தனாக இருக்கவில்லை. மேலும் முப்பதுகளில் ஆண்கள் குடும்பத்தைப் பராமரிப்பது என்ற பொதுவாக நிலவிய  கருத்து அவனது வாழ்தலில் ஆதிக்கம் செலுத்தவில்லை. வயிற்றுப்பாட்டைக் கவனிப்பது, வீட்டுப் பராமரிப்பு மற்றும் மெத்தைகளுக்கு விரிப்புகள் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு செலவு, அவர்களது உடை மற்றும் இன்னபிற அற்ப விஷயங்களைக் கவனிப்பது எப்போதும் அவன் மனைவி கோன்ச்சாவைச் சார்ந்தது. அவனோ, இச்சமயங்களில் அவனால் வெற்றிகரமாக முடிகக்வே  முடியாததான பெரிய தொழில் ஒப்பந்தங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட ஒரு வியாபார ஒப்பந்தத்தை முடிக்கும் வகையாக, தன் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாத போதிலும் ஒரு பெரும் தொகைக்கு காசோலை எழுதும் பிரமாதமான யோசனை அவனுக்கு வந்தது. இதன் விளைவாக அவனைக் கைது செய்யும் உத்தரவு தரப்பட்டு காவல் துறையினர் அவனைத் தேடி அவன் வீட்டிற்கு வந்தனர்.
கோன்ச்சாவிற்கு விவகாரம் முழுக்க என்ன என்று தெரிய வந்த போது அவள் மனதில் முதலில் தோன்றியதைச் சொன்னாள்: ‘நடந்தது என்னவென்றால், இந்த மனுஷன் ஒரு கிறுக்கன், முழுப்பைத்தியம்.”
இந்த ரீதியிலான தர்க்க நியாயத்துடன்தான் அவள் அவனோடு விசாரணைக்குச் சென்றாள், இந்த ரீதியிலான தர்க்க நியாயத்தோடுதான் அவனை நிச்சயமாக ஒழித்துக் கட்டியிருக்கக் கூடிய தற்காப்பு பிரதி வாதங்களை அவன் செய்ய முற்படுவதிலிருந்தும் அவனைக் காப்பாற்றினாள். அந்தக் கொடுமையான துர்ப்பாக்கியத்திற்கு பதிலாக, அதே வாதத்தின் மூலம், கோன்ச்சா எஸ்பார்ஸா தன் கணவனை ‘சோலுலா”  பிரமிடுக்கு அருகிலிருந்த ஒரு மனநோய்க் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தாள். சமயத்துறவிகளால் மலை அடிவாரத்தில் நடத்தி வரப்பட்ட ஒரு அமரிக்கையான இடம் அது.
கோன்ச்சாவுடைய தந்தையின் மருத்துவ விஜயங்களுக்கான பிரதி உபகாரமாக, அந்தக் காசோலை விவகாரம் மறந்து போகும் வரையில் திருவாளர் ஹினியெஸ்ட்டா அங்கு தங்கிக் கொள்ளலாம் எனத் துறவிகள் அனுமதித்தனர். காப்பகத்தின் தகர்க்க முடியாத சுவர்களின் எல்லைக்குள் அந்த புத்திஸ்வாதீனமுள்ள மனிதனின் மாதாந்திர பராமரிப்புக்காக கோன்ச்சா கண்டிப்பாக பணம் தர வேண்டியிருக்கும்.
ஆறு மாதங்களுக்கு அவனது தங்குதலுக்காக பணம் செலுத்தப் பெரும்பாடுபட்டாள். அவளது நிதி நிலைமை மேலும் அனுமதிக்காது என்று ஆனபோது,தன்னை சட்டபூர்வமான பாதுகாவலராகப் பிரகடனப் படுத்திக் கொண்ட பிறகு, அவளது கணவனை மீட்டுக் கொண்டுவர முடிவுசெய்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவனை அழைத்துவர அவள் சோலுலாவிற்குச் சென்றாள். அவன், வழுக்கைத் தலையில் கடல்கன்னியின் உருவத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட மாலுமி ஒருவனைப் பற்றிய கதை ஒன்றை துறவிகளுக்குச் சொல்லி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு, அவர்களோடு சேர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டாள்.
“உங்கள் மேல்கூட அதுபோல ஒன்று இருந்தால் பார்க்க அவ்வளவு மோசமாக இருக்காது,”விரிந்த புன்னகையோடிருந்த துறவி ஒருவரிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
திரு. ஹினியெஸ்ட்டா பேசிக் கொண்டிருந்த போதே, தன் மனைவி உணவுக்கூடத்தை நோக்கி நடைவழியில் நடந்துவந்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். ஆண்கள், தாம் மட்டுமே இருக்கிறோம் என்று உணரும் சமயங்களில் இருப்பது போல காணப்பட்ட குழந்தைத்தனமான மகிழ்ச்சியுடன் அவனும் துறவிகளும் பேசிக் கொண்டிருந்த மேஜைக்கு அருகில் அவள் வந்து சேரும் வரைக்குமான நேரம்வரையிலும் அவன் தொடர்ந்து பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தான்.
இது போன்ற கூட்டங்களின் போதான விதிமுறைகளைப் பற்றி அறிந்திராதவள் போல,  விசேஷமானவை என்று அவள் கருதிய தருணங்களில் அணிந்த உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணிகளின் டிக்þடாக் ஓசையுடன் கோன்ச்சா எஸ்பார்ஸா மேஜையைச் சுற்றி நடந்தாள். தன் கணவனுக்கு நேராக எதிரில் வந்தவுடன் அந்தக் குழுவினருக்குப் புன்னகையோடு முகமன் கூறினாள்.
“நீயா? நீ என்ன செய்கிறாய் இங்கே?” ஹினியெஸ்ட்டா கேட்டான், ஆச்சர்யத்தை விட அதிகமாக அசௌகரியத்துடன்.
“உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்,” கோன்ச்சா அத்தை, தன் குழந்தைகளைப் பள்ளிகூடத்தில் சந்திக்கும் போது, ஒரு அணைப்பிற்கு ஈடாக அவர்களது சுதந்திரம் என்கிற பொக்கிஷத்தை பரிமாறுவதாக பாவித்துக் கொண்டு அவர்களிடம் பேசுவதைப் போல கூறினாள்.
“ஏன்?” என்றான் ஹினியெஸ்ட்டா எரிச்சலோடு.”நான் இங்கே பாதுகாப்பாக இருக்கிறேன். இங்கிருந்து வெளியே போவது சரியாக இருக்காது அது மட்டுமில்லாமல் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். இங்கே இருக்கும் தோட்டங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறம் என் ஆன்மாவிற்கு அற்புதங்களை நிகழ்த்துகிறது.”
“என்ன?” என்றாள் கோன்ச்சா எஸ்பார்ஸா .”நான் உனக்கு என்ன சொல்கிறேன் என்றால், இப்போதைக்கு நான் இருக்கும் இடத்தில் நன்றாகத்தான் இருக்கிறேன். கவலையே படாதே. புத்தி ஸ்வாதீனம் உள்ளவர்கள் சிலர் எனக்கு நல்ல நண்பர்கள். மற்றும் பைத்தியங்களோடும் எனக்கென்றும் பெரிய பிரச்சினை கிடையாது. சிலர் அபூர்வ சந்நதம் வரும் தருணங்களைக் கொண்டவர்களாயிருக்கின்றனர், மற்றவர்கள் பிரமாதமான பேச்சாளர்கள், எஞ்சியவர்கள் எனக்கு நன்மையே செய்திருக்கின்றனர். ஏனென்றால் இந்த இடத்தில் கூச்சல் போடுகிறவர்கள் கூட உன் பிள்ளைகளை விடக் குறைவான கூச்சலே இடுகின்றனர்,” ஏதோ அந்தக் குழந்தைகளின் வாழ்விற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல சொன்னான்.
”ஹினியெஸ்ட்டா! உன்னை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன் நான்,” வெற்றுவெளியைக் கேட்டாள் கோன்ச்சா எஸ்பார்ஸா. தயவு செய்து அவருக்கு விளக்குங்கள், அவரது விடுமுறைக் கழிப்பிற்கு பணம் செலவாகிறது என்பதையும், இதற்கு மேல் ஒரு நாளைக்கு கூட நான் பணம் தரப் போவதில்லை என்பதையும்.”
அந்த பாதிரி, திரு. ஹினியெஸ்ட்டாவிடம் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்பதை எவரும் யூகம்தான் செய்யமுடியும். ஆனால் நிஜத்தில் அந்த திங்கட்கிழமை காலை கோன்ச்சா அத்தையின் முன்வாசல் நாதாங்கி மெல்லிய சப்தம் எழுப்பியது. அவளது கணவன் கதவைத் தள்ளித் திறக்கும் சமயங்களில் எழும் அதே நிதானமான ஓசை.
“நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் அம்மா,” ஒரு துக்கித்தவனின் சோகத்துடன் ஹினியெஸ்ட்டா சொன்னான்.
“நல்லது மகனே,” என பதில் கூறினாள் அவன் மனைவி எவ்வித ஆச்சர்யத்தையும் வெளிக்காட்டாமல். “திரு பெனிடெஸ் உன்னைக் காணக் காத்திருக்கிறார்.”
“ஒரு வியாபார ஒப்பந்தத்தை முன்வைக்க++ என்றான். அவன் குரலில் கொஞ்சம் உயிர்ப்பு திரும்ப வந்திருந்தது. “நீ பார்க்கப் போகிறாய், பார் எப்படிப்பட்ட ஒப்பந்தம் என்று, கோன்ச்சா, இந்த முறை நீ பார்க்கத்தான் போகிறாய்.”
“இந்த மனிதர் இப்படிபட்டவராகத்தான் இருந்தார்,”அத்தை பலவருடங்களுக்குப் பிறகு விமர்சித்தாள். “தான் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருந்தார் அவர்.”
அந்த சமயத்திற்குள் கோன்ச்சா அத்தையின் விருந்தினர் மாளிகை வெற்றிகரமான ஒன்றாக ஆகியிருந்தது. ஓர் உணவு விடுதியை ஆரம்பிக்கும் அளவிற்கு வருமானத்தை அது ஈட்டித் தந்திருந்தது. சில நாட்களுக்கு பிறகு அதை மூடிவிட்டு நில புலன்கள் வியாபாரத்தில் ஈடுபட்டாள். அது அவளுக்கு போலான்கோ நகரில் சிறிதும், ‘அகாபுல்கோ’வில் சிறிதும் நிலம் வாங்கும் அளவிற்கு வாய்ப்பைத் தந்தது.
அவளது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும்,  திரு. ஹினியெஸ்ட்டாவின் மரணத்திற்கு பிறகும் அவள் அலைகளைச் சித்திரம் தீட்டவும், தன் தந்தையின் ஆவியுடன் தொடர்பு கொள்வது எப்படி என்பதையும் ‘லா க்வெப்ராதா’வில் கற்றுக் கொண்டாள். அப்போது அவள் இருந்ததைப் போல சந்தோஷமாக இருந்தவர்கள் வெகுசிலரே.
அதனால்தான் வாழ்க்கை கடுமையாக அவளை மூர்க்கம் கொள்ளச் செய்தது, அவள் அதனை சந்தோஷமாக  அனுபவிக்க தொடங்கிய சமயம் அவளை விட்டு நீங்கிச் சென்று.

ஆங்கிலத்தில்: ஏமி ஸ்கில்ட்ஹௌஸ்
தமிழில் : தேஜு கிருஷ்ணா.

Posted in Short Stories in Translation | Tagged: , , | Leave a Comment »

பெரிய கண்களுடைய பெண்கள் – லியோனார் அத்தை

Posted by tejukrishna on December 20, 2008

ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா

epc-531

Eyes

உலகிலேயே மிகக் கச்சிதமானத் தொப்புளைக் கொண்டிருந்தாள் லியோனார் அத்தை: அவளது தட்டையிலும் தட்டையான வயிற்றின் மிகச் சரியான மையத்தில் மறைவாக இருந்த ஒரு புள்ளி. தேமல்களுடைய முதுகையும், குழந்தையாக அவள் இருந்த போது அவள் அருந்திய நீரைக் கொண்டிருந்த கூஜாவைப் போல் திரண்ட இறுக்கமான இடுப்பையும் அவள் பெற்றிருந்தாள். அவளது தோள்பட்டைகள் சற்றே மேலெழும்பியிருந்தன,அவள் மெல்லென நடந்தாள், ஏதோ கம்பி மீதிருப்பதைப் போல. அவள் கால்கள் நீளமானவையாகவும் பொன்னிறத்தவையாகவும், அவளது யோனியின் மேற்புறத்து மயிர் ஒரு நிமிர்ச்சியான மயிர்த்திரளாகவும், செந்நிறமென்மேடாகவும் இருந்தன என்றும், அவள் இடையை அவளை முழுமையாக இச்சிக்காமல் பார்ப்பது என்பது அசாத்தியமானதாக இருந்தது எனவும் அவற்றைக் கண்டவர்கள் சொல்லுவர்.
அவள் தனது பதினேழாம் வயதில், தன் அறிவை அனுசரித்து, அறிவுள்ள ஒருத்தி தன் வாழ்நாள் முழுவதும் தன்னோடு துணையாக உடன் வரத்தக்க ஒருவனாக தேர்ந்து கொள்ளத் தகுந்த, மிகப் பொருத்தமான ஆளாக இருந்த ஒருவனை மணந்து கொண்டாள். ஆல்பெர்டோ பலாசியோஸ், பதினைந்து வருடங்களும், முப்பது சென்டிமீட்டர் உயரமும், அதற்கு சமவிகிதத்தில் அவள் மீது அனுபவமும் கொண்ட ஒரு செல்வந்தனான, கண்டிப்பு மிகுந்த பத்திர அதிகாரி. பல சலிப்பூட்டும் பெண்களின் காதலனாக அவன் இருந்திருக்கிறான். திருமணம் குறித்து ஆலோசிக்கையில் அவன், நீண்டகாலத் திட்டம் ஒன்றையே கருத்தில் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டபோது அந்தப் பெண்கள் மேலும் களைத்துப் போயினர்.
எளிதாக இருந்திருக்க வேண்டிய, ஆனால் சமீபத்தில் இறந்து போன லியோனார் அத்தையின் தந்தை, தன் மனைவியை அவளது வாழ்நாளில் ஒரு அரைமணி நேரம் கூட சுயமாகச் சிந்திக்க அனுமதித்திருக்கவில்லை என்ற காரணத்தினால் மிதமிஞ்சிய சிக்கலாகிவிட்ட ஒரு வாரிசு உரிமை விவாகாரம் சம்பந்தமான சட்ட நடவடிக்கைக்காக, ஒரு மதியவேளையில் தன் தாயின் துணையோடு பத்திர அலுவலகத்தற்குள் விதிவசமாக நுழைந்தாள் லியோனார் அத்தை. அவள் தந்தைத் தன் மனைவிக்காக மளிகைக்கடைக்கு செல்வதையும், சமைப்பதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தார். செய்தித்தாள்களிலுள்ள செய்திகளை அவளுக்காகத் தொகுத்து, அதைப்பற்றி அவள் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்வார். அவளுக்கு எப்போதும் ஒரு கணிசமான தொகையை செலவுக்கென தந்தார். அவள் அதை எப்படி செலவு செய்தாள் என்று கேட்டதே இல்லை. அவர்கள் சேர்ந்து காணச் சென்ற திரைப்படங்களில் என்ன நிகழ்கிறது என்பதைக் கூட அவர் சொன்னார் “பார் லூயிஸ்ட்டா, இந்தப்பையனுக்கு அந்தப்பெண் மேல் காதல். பார் அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்! பார்த்தாயா? இப்போது அவன்,அவளைத் தழுவிக் கொள்ள ஆசைப்படுகிறான், தழுவிக் கொள்கிறான் இப்போது, இப்போது அவன் அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ள சொல்லி கேட்கப் போகிறான். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அவளைக் கைவிட்டு விடப்போகிறான்.”
தந்தைத்தனமான இந்த சீராட்டலின் விளைவாக, லியோனார் அத்தையின் தகப்பனாக எப்போதும் இருந்த அந்த ஆதர்ச மனிதனின் திடீர் இழப்பு. பேதை லூயிஸ்ட்டா அத்தைக்கு பெரும் மனக்கவலையைத் தந்ததோடு, தீவிர சிக்கலாகவும் ஆகிவிட்டதை அவள் கண்டாள். இந்தத் துக்கத்துடனும், சிக்கலுடனும்தான் உதவி தேடி பத்திர அதிகாரியின் அலுவலகத்திற்கு வந்தனர். பத்திர அதிகாரி பலாசியோஸ் பெரும் அக்கறைக் கொண்டவனாயும், காரியமாற்றும் திறன் படைத்தவனாகவும் இருப்பதை அவர்கள் கண்டனர். எனவேதான், துக்க அனுஷ்டிப்பில் இருந்த போதும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அவனை லியோனார் அத்தை திருமணம் செய்து கொண்டாள்.
அதன்பின், எப்போதும் அவள் வாழ்க்கை முன்பு இருந்தது போல அவ்வளவு எளிதாக இருக்கவே இல்லை. நுட்பமான அந்த ஓரே தருணத்தில் மட்டும் அவள் தன் தாயின் அறிவுரையை பின்பற்றினாள்:”‘மரியே வாழ்க’ என்று சொல்லிக்கொள்”. நிஜத்தில் பல “மரியே வாழ்க” வாழ்த்துக்கள். ஏனெனில், ஏதோ காரணத்தால் முன்கூட்டியே எதிர்பார்த்தோ, அன்றியோ அவளது குறுகிய மெல்லிடையின் மீது அவன் தன் கைகளை வைத்த நேரத்தில், தவிர்க்க முடியாமல், ஆரம்பிக்கும் தொடர்சியான முக்கல் முனகல்கள் தொடங்க ஆரம்பிக்கும் களியாட்டத்தின் உச்சத்தை எட்டுவதற்கு முன்பாக,சமயங்களில் அவளது வெட்கங் கெட்டக் கணவன் ஜெபமாலையின் பத்து சுற்றுக்கள் ஆகும் அளவுக்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான்.
இருபத்தைந்து வயதிற்குட்பட்ட ஒரு பெண் விரும்பியிருக்கக் கூடிய எல்லாவற்றையும் லியோனார் அத்தைக் குறைவின்றிப் பெற்றிருந்தாள்: தொப்பிகள், முகத்திரைகள், ஃப்ரெஞ்ச் காலணிகள், ஜெர்மானிய தட்டுமுட்டுப் பாத்திரங்கள் ஒரு வைர மோதிரம், ஓர் ஈடு இணையற்ற முத்து மாலை, நீல பச்சை ரத்தினக் கல், பவளம் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் செய்த காதணிகள். திரியத்துவ மார்க்க கன்னியாஸ்திரிகளால் சித்திரத் தையல் செய்யப்பட்ட உள்ளாடைகள் முதற்கொண்டு இளவரசி மார்க்கெரெட்டின் கிரீடம் போலவே இருந்த ஒன்றுவரையிலான சகலமும். அவள் விருப்பப்படக் கூடியவை எல்லாம் அவளுக்குக் கிடைத்தன, அவளது கணவனின் அர்ப்பணிப்பு உட்பட, இந்தப் பெண் மட்டும் இல்லாத வாழ்க்கை சகிக்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்பதை அவன் சிறுகசிறுக உணர ஆரம்பித்தான்.
பத்திர அதிகாரி, வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது அரங்கேற்றிய அன்பில் தோய்ந்த களியாட்டங்கள் மூலமாக லியோனார் அத்தையின் வயிற்றில் முதலில் ஒரு பெண்ணும் பின்னர் இரண்டு பையன்களும் உருப்பெற்றனர். திரைப்படங்களில் மட்டுமே நிகழ்வது போல, மூன்று முறையும் லியோனார் அத்தையின் வயிறு வீங்கி பின் தட்டையாக வடிந்தது, புலப்படக்கூடிய புற பாதிப்புகள் எதுவும் இன்றி. இத்தகைய அற்புதத்திற்கு அத்தாட்சி கூறும் வகையாக ஒரு சான்று பத்திரத்தை எழுத பத்திர அதிகாரி விருப்பப்பட்டாலும் கூட தேடல் ஆர்வமும் காலமும் அவன் மனைவிக்கு அருளியிருந்த பணிவும், சாந்தமும் சிரத்தையுமான ஊக்கத்தின் உதவியோடு அதை வெறுமனெ சந்தோஷித்து அனுபவிப்பதோடு நிறுத்திக் கொண்டார். களியாட்டம் நேர்த்தியாக ஆகத் தொடங்கியிருந்தது. லியோனார், கையில் ஜெபமாலையோடு அதை அனுபவிப்பதை நிறுத்திவிட்டிருந்தது மட்டுமன்றி அதற்காக அவனுக்கு நன்றி சொல்லவும் ஆரம்பித்தாள். பின்னர் ஆழ்ந்து உறங்கிப் போனாள், அன்றைய தினம் முழுக்க நிலைத்திருந்த புன்னகையோடு.
இந்தக் குடும்பத்திற்கு, வாழ்க்கை இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. மக்கள் எப்போதும் அவர்களைப் பற்றி நல்லவிதமாகவே பேசினர். அவர்கள் ஒரு ஆதர்ச தம்பதியராக இருந்தனர். திரு.பலாஸியோஸ் அதிர்ஷ்டக்காரியான லியோனாருக்கு அளித்து வந்த கனிவிற்கும், ஆதரவிற்கும் அதைக் காட்டிலும் சிறந்த உதாரணத்தை அக்கம்பக்க வீட்டுப் பெண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது கணவர்கள், தாம் கடும் சினம் கொண்டிருந்த சமயங்களில், திருமதி பலாசியோஸின் சாந்தமான புன்னகையை மானசீகமாக உருவகித்துக் கொண்ட அதே சமயம் அவர்களுடைய மனைவியர் கூட்டாக, பிலாக்கணங்களின் பிரார்த்தனையை கோர்த்தனர்.
ஒருவேளை, எல்லாம் இதே ரீதியில் போய்க் கொண்டிருந்திருக்கக் கூடும், ஒரு ஞாயிறு அன்று லியோனார் அத்தைக்கு மெட்லெ(ர்) பழங்கள் வாங்க வேண்டும் என்று தோன்றாமல் போயிருந்தால். அவளது ஞாயிற்றுக் கிழமை சந்தை விஜயங்கள் ஒரு சந்தோஷகரமான, ஏகாந்தமான சடங்காக ஆகியிருந்தன. முதலில் எந்தப் பழத்திலிருந்து எந்த நிறம் வந்தது என பகுத்துணர முற்படாமல், தக்காளிக் கடைகளை எலுமிச்சை விற்ற கடைகளோடு ஓருசேரக்கலந்து அந்த மொத்த இடத்தையும் ஒரு பார்வை பார்த்தாள். நீல டாகோ (மெக்ஸிகன் மாமிச பலகாரம்)வைச் செய்து கொண்டிருந்த, தனது நூறு வயதை வெளிக்காட்டிக் கொண்டிருந்த, ஒரு கனத்த சரீர பெண்மணியிடம் செல்லும் வரை நிற்காமல் நடந்தாள், லியோனார்டிகா. மண்ணாலான சப்பாத்திக் கல்லிலிருந்து பாலாடைக் கட்டி நிரம்பிய டாகோ ஒன்றை எடுத்து, கவனமாக சிறிது சிகப்பு நிறத்திலிருந்தக் குழம்பை அதன் மேல் ஊற்றிக் கொண்டாள். பிறகு மளிகைப்பொருட்கள் வாங்கியபடியே மெதுவாக அதை சுவைத்தாள்.
மெட்லெ(ர்) ஒரு ஆழ்மஞ்சள் நிறமும், வெல்வெட் போன்ற தோலையும் கொண்ட ஒரு சிறிய பழம். சில கசப்பவை சில இனிப்பவை. கருத்த இலைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் அவை கொத்துகொத்தாகக் காய்க்கும். பின்னிய சடையுடன், பூனை போல துறுதுறுவென சிறுமியாக அவள் இருந்த காலத்தில், பல மதிய வேளைகளில் லியோனார் அத்தை அவளது தாத்தா,பாட்டி வீட்டில் மெட்லெ(ர்) மரங்கள் மீது ஏறியிருக்கிறாள். விரைவாக சாப்பிடவென்று அங்கே உட்கார்ந்திருப்பாள்:கசப்பானது மூன்று, இனிப்பானது ஒன்று, ஏழு கசப்பானது, இரண்டு இனிப்பானதுþசுவைகளின் தேடலும், கலவையும் ஒரு ருசிகரமான விளையாட்டாக ஆகும்வரை. மரம் ஏறுவதிலிருந்து சிறுமிகள் தடை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பிஞ்சில் பழுத்த கண்களும், மெலிந்த உதடுகளும் தீர்க்கமான குரலும் கொண்டிருந்த சிறுவனான அவளது உறவினன் செர்ஜியோ, கேள்விபட்டிராத ரகசிய சாகசங்களுக்கெல்லாம் அவளைத் தூண்டினான். அவற்றுள் மிக எளிதாக இருந்த ஒன்று மரம் ஏறுவது.
அவள் மெட்லெர்களைச் சந்தையில் கண்டாள். அவை விநோதமாக இருந்தன; மரங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு, ஆனாலும் முழுக்க அதனின்று பிரிந்து நிற்காமல். ஏனெனில், மெட்லெர்கள் இலைகள் நிறைந்த, மிக மென்மையான கிளைகளிலிருந்துதான் இன்னமும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
அவற்றை அவள் வீட்டிற்கு கொண்டு சென்றாள். அவளுடைய குழந்தைகளை கீழே அமர்த்தினாள் சாப்பிட வைக்க. அதே நேரம் தன் பாட்டனாரின் வலிமையான கால்கள் மற்றும் பாட்டியின் மொந்தை மூக்கு பற்றிய கதைகளை அவர்களுக்குச் சொன்னாள். சிறிது நேரத்தில் அவள் வாய், வழவழப்பான கொட்டைகளாலும் பட்டுப் போன்ற பழத்தோல்களாலும் நிரம்பி வழிந்தது. பின் திடுமென்று பத்துவயதானவளாய் இருந்த பிராயம் திரும்பி வந்தது. அவனுடைய வேட்கை மிகுந்த கைகள், செர்ஜியோ மீதான அவளது மறந்து போயிருந்த ஆசை, மரத்தின் மேலே அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.
பெற்றோரின் உடன் பிறந்தவர்களின் மக்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் குடிகாரர்களைப் போலத் தோற்றம் தரும் குழந்தைகளைப் பிறக்கச் செய்து கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று அவர்கள் அவளிடம் சொன்ன நாளில், அவளிலிருந்து ஏதோ ஒன்று பிய்த்து எறியப்பட்டு விட்டிருந்தது என்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள். அதன்பின் அவளால் கடந்துபோன நாட்களுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. அப்போதிலிருந்து, இந்த சொல்லவொண்ணாத, கடந்த காலத்திற்கான திடீர் ஏக்கம் அவளது மதியப் பொழுதுகளின் சந்தோஷத்தை முடக்கிப் போட்டது.
அவளுடைய குழந்தைகள் மழையில் காகிதப் படகுகள் விடும் சமயத்திலான அவளது பரிபூரண அமைதி, உதார குணமும் கடும் உழைப்பும் கொண்ட அவள் கணவனின் தயக்கமின்றி பொழியும் நேசம் இவற்றோடு þஅவளது கனகச்சிதமான தொப்புளை அதிரச் செய்த உறவினன் விலக்கப்பட வேண்டியவனில்லை, மற்றும் எல்லா காரணங்களுக்காகவும், என்றென்றைக்குமாக அவன் அவளுக்கு தகுதியானவன் என்கிற அவள் தேகம் முழுக்கப் பரவியிருந்த அறுதிப்பாட்டிற்கு மேலாக இதைவிடக் கூடுதலாக சேர்த்து அதிகம் வேண்டும் என்று கேட்க வேறு எவரும் துணிய மாட்டார்கள். யாராலும் முடியாது, அதாவது, வெறி கொண்ட லியோனாரைத் தவிர்த்து.
சின்கோ தெ மாயோ வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்த செர்ஜியோவை ஒரு மதியநேரத்தில் அவள் எதிர்பாரதவிதமாகச் சந்தித்தாள். ஒவ்வொரு கையிலும் ஓரு குழந்தையை பிடித்தவண்ணம் சான்டோ தொபிங்கோ தேவாலயத்திலிருந்து அவள் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்த மாதத்தில் ஒவ்வொரு மதியங்களிலும் செய்து வந்ததைப் போல், மலர்அர்ச்சனை வேண்டுதலுக்காக அவர்களை அவள் அழைத்துச் சென்றிருந்தாள். அந்தப் பெண் குழந்தை சரிகைத்துணியும் மென்பருத்தியாலும் தயாரிக்கப்பட்டிருந்த நீண்ட உடையில் சிறிய வைக்கோல் மாலை மற்றும் பிரம்மாண்டமான பட்டு முகத்திரையோடு ஒரு ஐந்து வயது மணப்பெண் போன்றும், பையன் அவனது ஏழு வயதிலும் அவனைச் சங்கடமாக உணரச் செய்த ஒரு பெண்தனமான தேவாலய ஊழியனின் உடையிலும்.
“அந்த சனிக்கிழமை மட்டும் நீ உன் தாத்தாவின் வீட்டிலிருந்து ஓடிப்போயிருக்காவிட்டால், இந்த இருவரும் என்னுடையவர்களாக இருந்திருப்பார்கள்”,அவளை முத்தமிட்டபடி செர்ஜியோ சொன்னான்.
“நானும் அதே மனக்குறையோடுதான் வாழ்கிறேன்” ,லியோனர் அத்தை பதில் கூறினாள்.
இந்த பதில், அந்த நகரின் மிகத் தகுதியான பிரம்மச்சாரியை நிலைகுலையச் செய்தது. இருபத்தேழு வயதான, ஸ்பெயினிலிருந்து வெகுசமீபத்தில் திரும்பி வந்திருந்த- ஆலிவ் பயிர் வளர்ப்பில் மிகச் சிறந்த தொழில் நுட்பங்களை அங்கே அவன் கற்றிருந்ததாக சொல்லிக் கொண்டார்கள்- செர்ஜியோ, வெராக்ரூஸில் ஒன்றும் சான் மார்ட்டினில் ஒன்றும் மேலும் அசலானுக்கு அருகாமையில் ஒன்றுமாக பண்ணைகளுக்கு வாரிசாக இருந்தான்.
லியோனார் அத்தை, அவனது கண்களிலும், உதடுகளை ஈரப்படுத்திக் கொண்ட அவள் நாவிலும் தடுமாற்றத்தைக் கண்டாள், பின் அவன் பதில் சொல்வதைக் கேட்டாள்.
“மீண்டும் எல்லாமே மரம் ஏறுவதைப் போல இருந்தால்!”
பாட்டி வீடு நம்பர் 11,சுர் வீதியில் இருந்தது. அது மிகப் பெரிதாகவும், மூலைகளும், பிளவுகளும் நிறைந்தும் இருந்தது. ஐந்து கதவுகளைக் கொண்ட கீழ் தளம் ஒன்றைக் கொண்டிருந்தது அது. அங்கேதான் தாத்தா, மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த பொழுது போக்கு அறையில் நண்பர்களோடு பில்லியர்ட்ஸ் ஆடுவதற்கு பதிலாக, முதல் தளத்தின் அறைகளை கொஞ்ச நேரத்திற்கு மறக்கச் செய்த, தனது முகத்தில் அழுக்கேறச் செய்த பரிசோதனைகளில் மணிக்கணக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தை செலவிட்டார். பாட்டியின் வீடு, தோட்டத்தையும், ஆஷ் மரத்தையும், அவர்கள் எப்போதும் உருளைச் சருக்கு விளையாட்டை விளையாடவே பயன்படுத்திய ஒரு ஹாய் எலாய் மைதானத்தையும் பார்த்தபடி இருந்த ஒரு சிற்றுண்டி அருந்தும் அறையையும், ஒரு பெரிய பியானோ மற்றும் நீர்வற்றிய மீன் தொட்டி இருந்த ஒரு ரோஜா வண்ண முன்னறையையும், தாத்தாவிற்கு ஒன்றும், பாட்டிக்கு ஒன்றுமாக படுக்கையறைகளையும், சுவற்றின் வண்ணங்களைக் கொண்டு அறியப்பட்ட, முன்பு குழந்தைகளுடையவையாயிருந்த பல்வேறு விருந்தினர் அறைகளையும் கொண்டிருந்தது. தெளிவான சிந்தையோடு ஆனால் வாதத்தால் விறைத்துப் போயிருந்த பாட்டி, நீல அறையில் சித்திரம் தீட்டவென அமர்ந்திருந்தாள். அங்கே அவள் எப்போதும் பாதுகாத்து வைக்க விரும்பி தான் சேர்த்து வைத்த பழைய திருமண அழைப்பிதழ்களின் மேலுறையின் மேல் பென்சில் கொண்டு கோடுகள் வரைந்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு அவள் தித்திக்கும் திராட்சை சாறு ஒரு கோப்பை கொடுத்தாள், பிறகு பாலடைக்கட்டி, பிறகு பழைய சாக்லெட்டுகள். பாட்டியின் வீட்டில் எல்லாமே அப்படியே இருந்தன. சிறிது நேரம் சென்ற பிறகு வித்தியாசமாக இருந்த ஒரே ஒரு விஷயத்தைக் கவனித்தாள்
“பல வருடங்களாக உங்களை சேர்ந்தார் போல் பார்க்கவில்லையே நான்.”
“உடன் பிறந்தோரின் மக்கள் திருமணம் செய்து கொண்டால், முட்டாள் குழந்தைகள்தான் பிறக்கும் என்று நீங்கள் சொன்ன அந்தநாள் முதலாக பார்க்கவில்லை”, லியோனார் அத்தை பதில் சொன்னாள்.
பாட்டி புன்னகை செய்தாள், இதழ்கள் மீது இதழ்களாக இடைவெளியின்றியிருந்த ஒரு எல்லையற்ற பூவை அவள் வரைந்திருந்த தாளிற்கு மேலாக, நிச்சலனமாக.
“மெட்லெ(ர்) மரத்திலிருந்து இறங்கும் போது நீங்கள் உங்களைக் கிட்டத்தட்ட சாகடித்துக் கொண்ட சமயத்திலிருந்து இல்லை”, செர்ஜியோ சொன்னான்.
“மெட்லெர் கொய்வதில் நீங்கள் இருவரும் சாமார்த்திய சாலிகள். அதைச் சரிவரச் செய்யும் ஆட்கள் யாரையும் என்னால் தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை.”
“இப்போதும் நாங்கள் சமர்த்தர்கள்தான்”, லியோனார் அத்தை சொன்னாள், தனது கச்சிதமான இடுப்பை வளைத்து.
அவர்கள் நீல அறையை விட்டு வெளியேறினர். தமது ஆடைகளை ஏறக்குறைய முழுவதும் களைந்துவிட்டு, ஏதோ ஒரு மந்திரத்தால் கட்டுண்டு ஈர்க்கப்பட்டவர்கள் போல தோட்டத்திற்குச் சென்றனர். மூன்று மணி நேரம் கழிந்த பிறகு அவர்களது தேகத்தில் அமைதியோடும், மூன்று மெட்லெர் கிளைகளோடும் திரும்பினர்.
“எங்களுக்கு பயிற்சி விட்டுப் போயிற்று” லியோனார் அத்தை சொன்னாள்.
“திரும்பப் பெறுங்கள் அதை, திரும்பப் பெறுங்கள், ஏனென்றால் அவகாசம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது”, வாய் நிறைய மெட்லெர் கொட்டைகளோடு பாட்டி பதில் சொன்னாள்.

Posted in Short Stories in Translation | Tagged: , , , | Leave a Comment »

ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா

Posted by tejukrishna on December 20, 2008

4486115928595b6c

இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபதாண்டுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகின் மிக முக்கிய நிகழ்வு பெண் எழுத்தாளர்களின், குறிப்பாக நாவல் எழுத்தாளர்களின் தோற்றம். இவர்கள் சுயத்தன்மையிலும் சுயேச்சைத்தன்மையிலும் தமது முன்னோடிகளை விஞ்சி நின்றனர். இவ்வகையில், ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா மெக்ஸிகோவின் மிக முக்கியமான பெண் எழுத்தாளர்.

மெக்ஸிகோவின் ப்யுப்லா நகரில் 1949 அக்டோபர் மாதம் பிறந்தவர். ஆரம்ப நாட்களில் மெக்ஸிகோவின் பத்திரிகைகளில் செய்தியாளராகத் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். தனது எழுத்தாற்றலை இவர் கூர்தீட்டிக் கொண்டது, மெக்ஸிகன் எழுத்தாளர் மையத்தின் (Mexican Writers’ Center) உதவியால்.
இவரது முதல் நாவலான Arráncame la vida (Tear This Heart Out)1985-ல் வெளியானது. இலக்கியத்திற்கான மஸாட்லான் விருது (Mazatlán Prize for Literature)பெற்றது. தற்போது திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது.நாவல் பெற்ற வரவேற்பு அவருக்கு முழுநேர எழுத்தாளராக மாற உத்வேகம் தந்தது.

தனது தேசத்தின் சமூக அரசியல் நிதர்சனங்களின் மீதான விமர்சனக் கருத்துரைகளாக விளங்கிய புதினங்களைத் திறம்பட படைத்தவர் என்றவகையிலும் நினைவில் நிற்கும்படியான பெண் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் என்றவகையிலும் மாஸ்ட்ரெட்டா பிரசித்தி பெற்றவர்.
மெக்ஸிகோவில் நிகழ்பவை எல்லாம் தனது சொந்த விவகாரங்கள் என்ற மூடத்தனமான நம்பிக்கையே தன்னை இலக்கியத்தின் பக்கம் கொண்டு சேர்த்தது என்கிறார். தனது படைப்புகள் எளிதில் சென்று சேர்பவைகளாகவும் அதேசமயம், வித்தியாசமானவையாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்:எனது வாசகர்களுக்கு வேறொரு உலகத்திற்கான விமான பயணச்சீட்டுத் தர விரும்புகிறேன்.

பெரிய கண்களைக் கொண்ட பெண்கள் நாவல் சுயசரிதத்தனமை கொண்டது. தனது குழந்தை கடும் நோயில் விழுந்த சமயம் உதித்த நாவல் இது.

அசாதாரணமான பெண்மணிகளின் முறிவுறாத சங்கிலித்தொடரில் ஓரு அத்தியாவசியமான இணைப்பு அவள் என தன் குழந்தையை நம்பவைக்க, அவளருகிலேயே அமர்ந்து கதை சொல்லத் தொடங்கினார். தனது வம்சாவளி பெண்களின் வரிசையோடு தனது கற்பனாதிறனையும் சேர்த்து தமது வாழ்வின் மையத்திருப்புமுனைத் தருணங்களில் சிக்கிக்கொண்ட, மாயத்தன்மையும் வேடிக்கையும் கலந்த வண்ணமிகு பெண்களின் கதாபாத்திரங்களை உருவாக்கினார். இக்கதைகளின் ஆற்றலைப் புரிந்துக்கொண்ட மாஸ்ட்ரெட்டா அவை தொலைந்து போய்விடதிருக்கவேண்டி அவற்றை எழுத்தில் கொண்டுவந்தார்.

Posted in Short Stories in Translation | 1 Comment »

பெரிய கண்களுடைய பெண்கள் -நடாலியா எஸ்பார்ஸா அத்தை

Posted by tejukrishna on December 8, 2008

Big Eyed Womenஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா


நடாலியா எஸ்பார்ஸா அத்தை

குட்டைக் கால்களும் வட்ட முலைகளும் கொண்டவளன நடாலியா எஸ்பார்ஸா,, ஒரு நாள் கடல் மேல் காதல் கொண்டாள். எந்தக் கணத்தில்  அந்த நெடுந்தொலைதூரத்து, புராணிக சமுத்திரத்தை அறிந்து கொள்வதற்கான நெருக்கும் பேராவல்அவளுக்கு வந்தது என்பதைத் தீர்மானமாக அறியமாட்டள் அவள், ஆனால் அது வந்த போது அவள் தன் பியானோ பள்ளியை உதறிவிட்டு கரீபியக் கடலைத் தேடியலைவதை மேற்கொள்ளும்  அளவிற்கு வல்லமையோடு வந்தது. ஏனெனில் அவளது மூதாதையர் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வந்துசேர்ந்தது கரீபியனுக்குத்தான். மற்றும் அவள் எதைத் தன் மனசாட்சியின் ‘காணாமற் போய்விட்டத் துணுக்கு’ என்று அவள் பெயரிட்டிருந்தது அங்கிருந்துதான் அவளை இடைவிடாமல் அழைத்துக் கொண்டேயிருந்தது.
அவளது தாய் , ஒர்அரை மணிநேரம்கூட அவளைப் பொறுமைகாக்கச் செய்ய  இயலாத அளவுக்குக் கடலின் அழைப்பு அவளுக்கு கடுமுனைப்பைத் தந்தது. நூகா (தேன் அல்லது சர்க்கரை, பருப்புகள், முட்டையின் வெண்கரு ஆகியன கொண்டு தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பண்டம்) தயாரிக்க தோதாக வாதுமைகள் கனியும் வரையோ, அவளது சகோதரியின் திருமணத்திற்கென அவர்கள் மேஜை விரிப்பில் செர்ரிகளின் சித்திரத் தையல் செய்வது முடிவுறும் வரையோ, சோரம் போதல் அல்லது சோம்பேறித்தனம் அல்லது குணமாக்க முடியாத மன நோய் அவளை திடீரென கிளம்பிப்போய்விடத் தீர்மானிக்கச் செய்யவில்லை என்பதை அவள் தந்தை புரிந்து கொள்ளும் வரையோ அவளுடைய உன்மத்தத்தைத் தணித்துக் கொள்ளும்படி வேண்டி அவளிடம் அவள் தாய் எவ்வளவோ மன்றாடியபோதும் அது பலனளிக்கவில்லை.
நடாலியா அத்தை எரிமலைகளின் சாயையில், அவற்றை இரவு பகலாக ஆராய்ந்தபடிவளர்ந்தாள், . ‘உறங்கும் பெண்மணி’யின் மார்பகத்திலிருந்த மடிப்புகள் மற்றும் ‘போப்போகாடெ பெட்ல்’ன்(மெக்ஸிகோ நகருக்கு அருகில் உள்ள ஒரு எரிமலை முகடு) மேல் கவிந்தருந்த, சவால் விடும் சரிவுகளை மனப்பாடமாக அறிந்திருந்தாள். இருண்ட பூமி மற்றும் குளிர்ந்த வெளிகளில், நிதானமான தீயில் இனிப்புப் பண்டங்களைச் செய்தபடியும், அளவுக்கு அதிகமாக திருத்தத்தோடு செய்யப்பட்ட குழம்பின் வண்ணங்களுக்குள் சீராக மறைந்திருக்கும் மாமிசத்தை சமைத்தபடியும் அவள் எப்போதும் வாழ்ந்து வந்தாள். அவள் அலங்கரிக்கப்பட்ட உணவுத் தட்டுகளில் உணவு உண்டாள், ஸ்படிகக் கண்ணாடிக் கோப்பைகளில் அருந்தினாள். தனது தாயின் பிரார்த்தனைகள் மற்றும் தன் பாட்டனாரின் ட்ராகன்கள் மற்றும் சிறகுகள் முளைத்த குதிரைகள் பற்றிய கதைகளைக் கேட்டபடி மணிக்கணக்கில் மழையின் முன்பாக நேரத்தை செலவிட்டாள். ரொட்டியையும் சாக்லெட்டையும் நொறுக்குத் தீனியாக அவள் உண்ணும் சமயமான அந்த பிற்பகல் வேளையில் ஒருநாள், ‘கம்பெச்செ’விலிருந்து வந்த அவளது மாமன்மார்கள் சிலர், வண்ணங்களாலானதும் ஒரு முரட்டுக் கடலால் சூழப்பட்டிருந்ததுமான கோட்டை நகரம் நோக்கிய தம் பயணத்தை  தொடர்வதற்கு முன்பாக, அவ்வழியே கடந்துபோகையில்தான் கடல் பற்றி அவள் அறிந்து கொண்டாள்.
ஏழு விதமான நீலம், மூன்று பச்சைகள், ஒரு பொன்னிறம் எல்லாம் கடலில் பொருந்தும். எவராலும் அந்த நாட்டிலிருந்து பிரித்தெடுக்க முடியாத வெள்ளி: மேகம் சூழ்ந்த  வானின் கீ்ழ் முழுமையாய். கப்பல்களின் துணிச்சலுக்கும் ஆள்பவக்ளின் சாந்தமான மனசாட்சிகளுக்கும் சவால் விடும் இரவு. ஒரு ஸ்படிகக் கனவு போன்ற காலைப் பொழுது,  வேட்கையைப் போல பிரகாசமாக மதியப் பொழுதுகள்.
அங்கே மனிதர்கள் கூட வித்தியாசமானவர்களாகத்தான் இருக்க வேண்டும், அவள் நினைத்துக்கெண்டாள். வியாழக்கிழமை, நொறுக்குத் தீனிக்கான நேரம் முதல், ஓயாமல் அவள் கற்பனை செய்து கொண்டிருந்த அந்தக் கடலுக்கு அண்மையில் வாழ்பவர்கள் தொழிற்சாலை முதலாளிகளாகவோ, அல்லது அரிசி வியாபாரியாகவோ அல்லது ஆலை உரிமையாளர்களாகவோ, அல்லது பண்ணையார்களாகவோ அல்லது தன் வாழ்நாள் முழுக்க மாறுதலில்லாத வெளிச்சத்தின் கீழ் அசைவற்று இருக்க முடிந்த எவராகவோ இருக்க மாட்டார்கள். அவளுடைய தந்தையும் சித்தப்பாவும் முந்தைய நாட்களின் மற்றும் இக்காலத்திய கடற் கொள்ளையரைப் பற்றியும், அவளது தாயின் பாட்டனார்- ‘டான் லோலன்ஸோ பாஷிங்கோ’-தனக்குச் சொந்தமான இரட்டைப்பாய்கள் கொண்ட மரக்கப்பலில் ‘காம்பெச்செ’விற்கு வந்து சேர்ந்திருந்தார் என்று அவர்களுக்கு அவள் சொன்னபோது, லோரென்சில்லோ என ஏளனமாக அவர்கள் பட்டப் பெயரிட்டு அழைத்த  அவரை பற்றியும் ஏராளமாகப் பேசியிருந்தனர். அந்த வெய்யிலும், அந்த வாடைக் காற்றும் தேவையாயிருந்த காய்ப்புகாய்ந்த கைகள் மற்றும் ஊதாரி உடல்கள் பற்றி அவ்வளவு சொல்லப்பட்டிருந்தது. மேஜை விரிப்பின் மீதும் பியானோ மீதும் அவளுக்கு பெரும் சலிப்பு ஏற்பட்டிருந்து. எனவே ஒரு மனவருத்தமும் இல்லாமல் அவள் மாமன்களைப் பின்தொடர்ந்து புறப்பட்டுச் சென்றுவிட்டாள். தனது மாமன்களோடு வசிப்பாள் அவள் என்று அவள் தாய் நம்பினாள். தனித்து, பித்துபிடித்த ஒரு செம்மறி ஆட்டைப் போல என்று அவள் தந்தை யூகம் சொன்னார்.
அவள் செல்லும் வழியை கூட அறிந்திருக்கவில்லை, கடலுக்கு போவது என்பதில் மட்டும் விருப்பமாயிருந்தாள். மெரிடாவிற்கான ஒரு பெரும் பயணம் மற்றும் பிரசித்தி பெற்ற அந்த வெள்ளை நகரின் சந்தையில் சந்தித்த மீனவர்களைப் பின் தொடர்ந்த ஒரு கடுமையான நீண்ட நடைப் பயணத்திற்கும் பிறகு அவள் கடலைச் சென்றடைந்தாள்.
அவர்கள் ஒரு முதியவரும் ஒரு இளைஞனும். அந்த முதியவர் ஒரு வாயாடி, கஞ்சாக் குடியர்,அந்த இளைஞனோ, இவையெல்லாம் கிறுக்குத்தனம் என்று கருதினான்.  இந்த வாட்டசாட்டமான அதிகப்பிரசங்கிப் பெண்ணோடு எப்படி அவர்கள்  ஹால்பாக்ஸ்க்கு திரும்ப போகிறார்கள்? அவர்கள் அவளை எப்படி விட்டுவிட்டு வர முடியும்?
“நீயும் அவளை விரும்புகிறாய்”, அந்த முதியவர் அவனிடம் சொன்னார். “அதோடுமட்டுமல்லாது அவளும் வரவேண்டுமென்று விருப்பப்படுகிறாள்.  அவள் வருவதற்கு எப்படி ஆசைப் படுகிறாள் என்பதை நீ பார்க்கவில்லையா?”
வெள்ளைச் சதையும் எலும்பாலுமான தமது மெல்லிய ஜந்துக்களுக்கு-அந்தக் கடலைப் போலவே நாற்றமும், அழகும் கொண்டிருந்த அவர்களது விநோத ஜந்துகளுக்கு- பண்டமாற்றாக எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த ஆட்கள் ஒருவர் பின் ஒருவராக வருவதைக் கவனித்தபடி அந்தக் காலைப் பொழுது முழுவதையும் அந்தச் சந்தையின் மீன்கடைகளில் அமர்ந்தபடி செலவிட்டாள் நடாலியா அத்தை. தனது , ‘சும்மா அப்படியே’  தந்துவிட விரும்பாத ஒருவனின் அவமானம் தோய்ந்த குரலையும், தோள்களையும், நடையையும் அசுவாரசியமாகக் கவனித்தாள்.
”இது இவ்வளவு விலை, இல்லையென்றால் நான் இதை திரும்ப எடுத்துக் கொள்கிறேன்” அவன் சொல்லியிருந்தான்.
“இத்தனைதான் விலை இல்லையென்றால் நான் திரும்ப எடுத்துக் கொள்கிறேன்”, நடாலியாவின் கண்கள் அவனைப் பின்தொடர்ந்தன.
முதல் நாள் நிற்காமல் நடந்தனர். நடாலியா கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்,கடற்கரையின் மணல் நிஜத்திலேயே சர்க்கரை போல வெண்மையாக இருக்குமா? இரவுகள் சாராயம் போலவே காட்டம் நிறைந்ததாக இருக்குமா? சில சமயங்களில் தன் கால்களைத் தேய்த்துக் கொள்ளவென பின்தங்கினாள், அவளைப் பின்னே விட்டுவிட்டுச் சென்றுவிட அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை அனுகூலமாக்கிக் கொண்டனர். பிறகு அவள் தனது காலணிகளை அணிந்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பாள், கிழவரின் வசைகளைத் திரும்பக் கூறிக் கொண்டு.
மறுநாள் மதியப் பொழுதில் அவர்கள் சென்று சேர்ந்தனர். நடாலியா அத்தையால் அதை நம்பவே முடியவில்லை. கடைசியாக எஞ்சியிருந்த சக்தியால் முன்னால் உந்தப்பட்டு, அவள் நீரை நோக்கி ஓடினாள், பின் தன் கண்ணீரை உப்பு நீரோடு சேர்க்கத் தொடங்கினாள். அவள் பாதங்கள், அவள் முழங்கால்கள், அவள் தசைகள் வலித்தன. அவளது முகமும் தோள்பட்டைகளும் வெயில் உலர்வால் எரிந்தன. அவள் வேட்கைகள், இதயம், கேசம் எல்லாம் வலித்தன.  ஏன் அவள் அழுகி்றாள்? இங்கே அமிழ்ந்துப் போய்விடுவது என்பதுதானே அவள் ஆசைப்பட்ட ஒரே விஷயம்?
மெல்ல இருளடர்ந்தது. முடிவற்ற கடற்கரையில் தன்னந்தனிமையிலிருந்தவள் தன் கால்களைத் தொட்டுப் பார்த்து அவை இன்னமும் கடற்கன்னியின் வாலாக மாறியிருக்கவில்லை என்பதைக் கண்டாள். துள்ளலாக ஒரு காற்று வீசிக் கொண்டிருந்தது, அலைகளைக் கரைக்குத் தள்ளியபடி. அவள் கைகளின் மேல் விருந்தாடிக் கொண்டிருந்த சில சின்னஞ்சிறு கொசுக்களை உதறியபடி கடலோரமாக நடந்தாள். அவளுக்கு வெகு அருகில் அந்த முதியவர் இருந்தார் அவளைக் கடந்த பார்வையோடு.
வெள்ளை மணற்படுகையில், தன் ஈர ஆடைகளோடு தன்னைக் கிடத்திக் கொண்டாள், பின் கிழவர் அருகில் வருவதை உணர்ந்தாள், வந்து பின்னிக் கிடந்த அவளது கேசத்தில் தன் விரல்களை நுழைத்து, அவள் அங்கே தங்கிவிட விரும்பினால் அது அவரோடுதான் இருக்க முடியும், ஏனென்றால் மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனெவே பெண்துணையோடு இருந்தார்கள் என்பதை விளக்கினார்.
“நான் உங்களோடேயே தங்கிவிடுகிறேன்” என்றாள், பின் உறங்கிப் போனாள்.
ஹால்பாக்ஸில் நடாலியா அத்தையின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆறுமாதங்கள் கழிந்த பின் ப்யுப்லாவிற்குத் திரும்பினாள், பத்து வயது கூடியவளாகவும் தன்னை யுக் யாம்மின் விதவை என்றும் கூறிக்கொண்டு.

அவள் சருமம் பழுப்பு நிறமாகவும், சுருக்கங்களுடனும், அவள் கைகள் காய்த்துப் போயும் இருந்தன. மேலும், அவள் ஒரு விநோதமான தன்னம்பிக்கைத் தனத்தை தன்னிலிருந்து வெளிப்படுத்தினாள். அவள் திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை இருந்தாலும் ஒரு ஆண் அவளுக்குத் தேவைப்படவும் இல்லை. அவள் ஓவியம் தீட்டக் கற்றுக் கொண்டாள். அவள் ஓவியங்களில் நீலம்,  பாரிஸ் மற்றும் நியூயார்க்கில் அவளைப் பிரசித்தமானவளாக்கியது.
என்றபோதும் அவளது வசிப்பிடம் ப்யுப்லாவாகவே இருந்தது. ஆயினும் சில மதியப் பொழுதுகளில் எரிமலைகளைக் கவனிக்கும் நேரங்களில், அவள் கனவுகள் கடல் நோக்கி உலவச் செல்லும்.
“ஒருவர் எங்கிருந்து வருகின்றாரோ அந்த இடத்தைச் சார்ந்தவாராகவே இருப்பார்”. அவள் சொல்வாள், கிழட்டுப் பெண்ணின் கைகளுடனும் குழந்தையின் கண்களுடனும் வர்ணம் தீட்டடியவாறு. “ஏனென்றால், விரும்புகிறீர்களோ இல்லையோ,  நீங்கள் எங்கே போனாலும் அவர்கள் உங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.”

Posted in Uncategorized | Tagged: | Leave a Comment »

Nadodi Manam in eBook form(downlodable)

Posted by tejukrishna on November 10, 2008

Nadodi Manam-this is book has been out of print for past four years. Since it contains very important essays on european and Asian poets and fiction writers, it is a must have book for your library. Those who don’t have a hard copy can now download it in electronic format for free( for a limited period) from the following link.

http://brammarajan.files.wordpress.com/2008/10/nadodimanam-bklt1.pdf

Posted in Uncategorized | Leave a Comment »

பிரம்மராஜன் கவிதைகள்

Posted by tejukrishna on November 10, 2008

brammarajan's poems from Zen mayilhttp://brammarajan.files.wordpress.com/2008/10/6paragraphpoems.pdfபிரம்மராஜன் கவிதைகள்

ஜென் மயில்

புன்னை மயில் விரைந்தது
ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து
குருதியொத்த நிறம்
சேதாரம் எதுமில்லை
கேட்டுத் திரும்பின கால்கள்
மைனாக்களின் உலோக ஸிம்பனியை
மடையான்களின் மாலை சாதகத்தை
ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில்
இருவரின் ஸ்பானர்கள் இயங்கும்
வெள்ளி வெளிச்சத்தில்
கைகள் ஒயக்காத்திருந்து
கடவுள் கயிறுகளை சற்றே
மேலே இழுத்து விடுகிறார்
கால்கள் கண்டன
விளக்கற்ற அடுக்களையில்
உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து
கொசுக்களைப் பிடித்துண்ணும்
மரத்தவளை

புத்திப் புலன்

புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில்
கண்கண்ட காட்சி புத்தி பாராது
அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது
திக்கித் திக்கி
புத்திக்குப் புலர் நேரம்
அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது
நடுநெஞ்சிலிருந்து
விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு
இலக்கை இழக்க
விரும்பாது

செங்கோணச் சமதளம்

சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து
நதியாகத் தவறி கிழக்கு மேற்கில்
குப்புறத் தூங்கும் சாக்கடை
துருவங்களில் வரைவளைவுகாய்
நீந்தும் நீர்ப்பாம்புகள்
தகவமைப்பின் உச்ச இலக்கணம்
பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள்
வரைவளைவுகளை வெட்டிச் செல்லும்
செங்கோணங்களும் பிறவும்
நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த
சிலந்தி இழைவழி இறங்குவது போல்
எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய்
சாம்பல் நிறக் கொக்கு
துணுக்கு மீன்கள்
நீந்தி ஒயும்
ஒளியும்
தென்வடலாய் இந்த வாயில்
கைப்பிடிச்சுவரில்
மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி
தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம்
இரண்டிலொன்றைத்
தேர்ந்து
குறிபார்க்க
யாருக்கென்ன
யோக்யதை

பெற்றே தீர்தல் மீண்டு

பிரயாணம் முடிந்து ஊர்வந்து
தேர்நின்ற பின் பயணவழிவரைபடம்
பார்த்து சென்றவழியெல்லாம்
எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது
பனையும் தென்னையும் மயங்கும் புலம்
மணலில் மறைந்து கிடக்கிறது
காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள்
ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள்
சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும்
மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும்
கார் தயங்கித் தடங்க
காகிதக் காசுகள் கைமாற
இழப்பொன்றுமில்லை
ஒர் சூர்யாஸ்தமனம்
உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய
கடல் காகங்கள்
எறும்பு மீண்டும் பாதை தொற்றிச்
செல்கிறது
மேலதிகாரியையும் சீருடையாளரையும்
வரைபடத்தில்
போடுவதில்லை
என்பதை அறியாது

நவீனக் குறுஞ்செய்தி

மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன்
அந்த தபால் கார்டு புரியாமல்
அடுத்த நாள் ஆயிரம்
வரைந்தீர் அத்தனையிலும் அதே
கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல
சொன்னதென்ன என்றேன் அடுத்து
விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது
பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள்
அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை
அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு
உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன்
ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா
படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா
வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா
வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா
படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை
‘பவர் ரீடிங்’ என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு
வாசித்ததையா
முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை
பிறகும் கடிதங்கள் எப்போதும் போல்
இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை
தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள்
உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று
எண்ணித் தட்டுகிறீர்
நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து
எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு
அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை
‘ஸ்பாம்’ பாதுகாப்புக்கு மிஞ்சியும்

அன்னம் உன் ஓவியம்

தந்தையைத் தீட்டுவது கடினமில்லை
பக்கவாட்டில் எழை வீடொன்றைப்
பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி
தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை
திறந்த கண்ணாடி ஜன்னல்
பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள்
வெண்ணிற உடுப்பில்
அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள்
ஃபிராய்டை கரியநிறக்
கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று
அம்மாவை வரையும் உக்கிரமில்லை
காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை
கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன்
சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய்
குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு
ஒரு ரோல்ராய்ஸ் கார்
தலையில் குத்தீட்டி எறிய குதிரை
மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே
பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க
ஒரு வாசிக்கப்படாத மேண்டலின்
உன்னை வரையும்போதுதான்
மூளை சுக்கல்சுக்கலாக
முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல்
தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க
வேண்டியிருக்கிறது
பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி
முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள்
எல்லாம் சமைந்து நிற்க
ஈயாடாது
எறும்பசையாது
சிகரெட் புகை சுழலாது
அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர்
தேனீ ரீங்கரிக்காது
சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல
மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க
உன்னருகே முட்டையிலிருந்து
மூன்று குஞ்சுகள்
அன்னமே

Posted in poems | Tagged: , , | 1 Comment »